சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும்பொதுமக்களுக்கு போலீசார் அறிவுரை
விழுப்புரம் மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு மாவட்ட சைபர்கிரைம் போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.
சைபர் கிரைம் சம்பந்தமாக பல்வேறு குற்றங்கள் பெருகிவரும் வேளையில் விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் தங்களது சொத்துக்களை விழிப்புடன் இருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக சைபர்கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்களது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எண், ஓடிபி, சிவிவி எண்கள் போன்றவற்றை பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு, பகுதிநேர வேலைவாய்ப்பு என வரும் போலி லிங்க் விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். போலியான கடன் செயலியை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கடன்பெற வேண்டாம். உங்கள் செல்போன் ஹேக் (Hack) செய்யப்பட்டு விடும்.
பொதுமக்களுக்கு அறிவுரை
புகழ்பெற்ற நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி (நேப்டல், மீசோ) உங்களுக்கு பரிசு விழுந்துள்ளதாக வரும் தபால்களை பார்த்து ஏமாறாதீர்கள். OLX, QUIKR போன்ற இணையதளத்தை பயன்படுத்தி வாகனம் இதர பொருட்களை விற்பதற்காக வரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மை அறியாமல் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்களிடம் தகவல்களை பரிமாற்றம் செய்யக்கூடாது. உங்களுக்கு தெரிந்தவர்களின் வங்கி கணக்கு எண்ணில் பண உதவி கேட்டு வரும் செய்திகளை நம்பி பண உதவி செய்ய வேண்டாம். சம்பந்தமில்லாத லிங்க், குறுந்தகவல், செல்போன் அழைப்பு போன்வற்றுக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் விடுவது நல்லது.
மேலும் இலவச வை-பை வசதிகளை பயன்படுத்தி உங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய பண பரிவர்த்தனையை தவிர்த்திடுங்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம் வாட்ஸ்-அப், டெலிகிராம் மூலம் அனுப்பும் கியூஆர் கோடை ஸ்கேன் செய்யாதீர்கள். மேற்கண்ட குற்றங்கள் ஏதேனும் நடந்திருந்தால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். மேலும் https:cybercrime.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.