கரடி தாக்கி படுகாயம் அடைந்த 2 பேருக்கு நிவாரண உதவி
கொல்லிமலை கரையங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் காளிகவுண்டர் (வயது80), பழனிசாமி (51). கரடி தாக்கி படுகாயம் அடைந்த இவர்கள் இருவரும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை கே.ஆர்.என். ராஜேஸ்குமார் எம்.பி. நேற்று நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார். பின்னர் அரசால் வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை வழங்கினார். அப்போது கலெக்டர் உமா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் ராஜேஸ்குமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- கரடியால் தாக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து முதல் தவனையாக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் காளிகவுண்டர், பழனிசாமிக்கு வழங்கினார். தற்போது காயம் அடைந்த காளிகவுண்டர், பழனிசாமிக்கு நான் 2-ம் தவனை வழங்கி உள்ளேன். தொடர்ந்து சிறந்த முறையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொல்லிமலை பகுதிகளில் வன விலங்குகள் தாக்காமல் இருக்க, சாலைகளில் பொதுமக்கள் அறியும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் நாமக்கல்லில் ரூ.85 கோடியில் அதிநவீன பால்பண்ணை அமைக்க பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், நாமக்கல் கிளை வளாகத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட பணியாளர்கள் ஓய்வு அறையை நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் நாமக்கல் நகர்மன்றத்தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி, துணை மேலாளர்கள் சிவமணி, ராஜேந்திரன், அருள்முருகன், கோட்ட மேலாளர் சுரேஷ் பாபு, கிளை மேலாளர்கள் செங்கோட்டு வேலன், மகேஸ்வரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.