3 பேரை கடித்து குதறிய கரடி சாவு
கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி திடீரென இறந்தது. அதன் உடல் களக்காடு வனப்பகுதியில் தீவைத்து எரிக்கப்பட்டது.
களக்காடு:
கடையம் அருகே 3 பேரை கடித்து குதறிய கரடி திடீரென இறந்தது. அதன் உடல் களக்காடு வனப்பகுதியில் தீவைத்து எரிக்கப்பட்டது.
கடித்து குதறிய கரடி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் கடந்த 6-ந்தேதி வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி சாலையில் சுற்றி வந்தது.
அப்போது அந்த வழியாக சென்ற கருத்தலிங்கபுரத்தை சேர்ந்த மசாலா பொடி வியாபாரி வைகுண்டமணி (58), பெத்தான்பிள்ளை குடியிருப்பை சேர்ந்த நாகேந்திரன் (56), அவரது சகோதரர் சைலப்பன் (50) ஆகியோரை கடித்துக் குதறியது. இதில் முகம் சிதைந்து படுகாயம் அடைந்த 3 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுமக்கள் போராட்டம்
இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கரடியை சுட்டு பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிவசைலத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையடுத்து இரவில் வனத்துறையினர் காட்டுப்பகுதிக்கு சென்று அந்த கரடியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுற்றித்திரிந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
திடீர் சாவு
பின்னர் அந்த கரடியை வாகனத்தில் ஏற்றி, ெநல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட செங்கல்தேரி வனப்பகுதிக்கு கொண்டு வந்து விட்டனர். அதை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
சோர்வடைந்த நிலையில் காணப்பட்ட அந்த கரடி நேற்று முன்தினம் திடீரென இறந்தது. மயக்க மருந்து அதிகமாக செலுத்தப்பட்டதன் காரணமாக அது இறந்து இருக்கலாம் என்று பொதுமக்களும், வனவிலங்கு ஆர்வலர்களும் புகார் தெரிவித்தனர்.
நுரையீரல் தொற்று
இந்த நிலையில் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் அறிவுரையின் பேரில் வனச்சரகர் பிரபாகரன் தலைமையிலான வனத்துறையினர் இறந்த கரடியை களக்காடு தலையணை வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர். அங்கு வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினர் கரடியின் உடலை பரிசோதனை செய்தனர்.
அந்த கரடி 8 வயதான பெண் கரடி ஆகும். நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக அது உயிரிழந்து இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர். பரிசோதனைக்கு பிறகு கரடியின் உடல் அந்த வனப்பகுதியில் தீவைத்து எரிக்கப்பட்டது.