தச்சுத்தொழிலாளி அடித்துக்கொலை
தேன்கனிக்கோட்டையில் தச்சுத்தொழிலாளியை அடித்துக்கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் தச்சுத்தொழிலாளியை அடித்துக்கொலை செய்த நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நண்பர்கள்
தேன்கனிக்கோட்டை கும்பாரதெருவை சேர்ந்தவர் முத்தப்பன். இவருடைய மகன் சக்திவேல் (வயது 19). தச்சுத்தொழிலாளி. நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் திம்மப்பா மகன் வரதராஜ் (21), கிருஷ்ணமூர்த்தி மகன் சேகர் (22). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். கடந்த 7-ந் தேதி இவர்கள் 3 பேரும் தேன்கனிக்கோட்டை பட்டாளம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் லே அவுட்டில் அமர்ந்து நண்பருடன் மது அருந்தி கொண்டு இருந்தனர்.
அப்போது சக்திவேலிடம் இருந்த கண்ணாடியை சேகர் கேட்டபோது சக்திவேல் தர மறுத்து விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சேகர், வரதராஜ் ஆகியோர் சக்திவேலை தாக்கினர். இதில் காயமடைந்த சக்திவேலை பொதுமக்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரிதாப சாவு
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சக்திவேல் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சம்பூர்ணம் மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சேகர், வரதராஜை ஆகியோரை கைது செய்தனர். தச்சுத்தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.