வாலிபர் அடித்துக்கொலை


வாலிபர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் பயங்கர மோதலில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:

ஓசூரில் பயங்கர மோதலில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பழனிபாபா பிறந்த நாள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரியில் கொத்தூர் சாலையில் திப்பு சுல்தான் கம்யூனிட்டி அலுவலக ஹால் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் பழனிபாபா பிறந்த நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் மன்சூர் அலிகான் தலைமை தாங்கினார்.

அந்த கூட்டத்தில் ஓசூர் ராம் நகரை சேர்ந்த ஆரீப் மகன் சினு (வயது 19) என்பவர் கலந்து கொண்டார். தொடர்ந்து மாலையில் நடந்த கூட்டத்தின் போது சினு சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த மன்சூர் அலிகான் மற்றும் ஓசூர் சானசந்திரம் வ.உ.சி. நகரை சேர்ந்த மகபூப் பாஷா (30) ஆகியோர் கூட்டத்தில் அமைதியாக இருந்தால் இருக்கவும். இல்லாவிட்டால் வெளியே சென்று விடவும் என சினுவிடம் கூறினர்.

சரமாரி தாக்குதல்

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு நடந்தது. இதில் ஆத்திரம் அடைந்த சினு, ஓசூருக்கு வந்து தனது நண்பர்களான ஓசூர் நாமல்பேட்டையை சேர்ந்த ஹரிபிரகாஷ் என்பவரின் மகனான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பவன் பிரகாஷ் (19), ஓசூர் ராம் நகரை சேர்ந்த சர்தாஜ் (18) ஆகியோரை அழைத்துக் கொண்டு மீண்டும் அங்கு சென்றார்.

கூட்டத்தில் இருந்து வெளியே வந்த மகபூப் பாஷாவை சர்தாஜ், சினு, பவன் பிரகாஷ் உள்ளிட்டோர் சரமாரியாக தாக்கினர். இதை கண்ட மகபூப் பாஷாவுடன் வந்தவர்கள் சினு, சர்தாஜ், பவன் பிரகாஷ் ஆகியோரை தாக்கினர். மேலும் அவர்கள் கைகளில் வைத்திருந்த இரும்பு கம்பி மற்றும் கத்தியை பறித்து அவர்களை சரமாரியாக தாக்கினர்.

3 பேர் படுகாயம்

இந்த சம்பவத்தில் சர்தாஜ், பவன் பிரகாஷ் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அதேபோல மகபூப் பாஷாவும் படுகாயம் அடைந்தார். இது குறித்து மத்திகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

போலீசார் படுகாயங்களுடன் கிடந்த சர்தாஜ், பவன் பிரகாஷ், மகபூப் பாஷா ஆகிய 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

அவர்களில் சர்தாஜ் ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக பெங்களூரு நிமான்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் நள்ளிரவில் சர்தாஜ் பரிதாபமாக இறந்தார். கொலை செய்யப்பட்ட சர்தாஜ் ஆட்டோ மெக்கானிக் ஆவார்.

பவன் பிரகாஷ் படுகாயங்களுடன் ஓசூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிறகு, மேல் சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மகபூப் பாஷா படுகாயங்களுடன் மத்திகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட சர்தாஜின் தந்தை பயாஸ் மத்திகிரி போலீசில் புகார் செய்தார்.

5 பேர் மீது கொலை வழக்கு

அதன் பேரில் போலீசார் மகபூப் பாஷா, ஓசூர் ராம் நகரை சேர்ந்த முகமது சாகிப், முபாரக், இம்ரான், பாரதிதாசன் நகரை சேர்ந்த அகமது ஆகிய 5 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், கொலை முயற்சி, கொலை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். இதில் மகபூப் பாஷா தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மற்ற 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓசூரில் பழனிபாபா பிறந்த நாள் விழா கூட்டத்தில் இருதரப்பினர் இடையே நடந்த பயங்கர மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story