தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மகன் சாலையில் சென்றவர்களையும் தாக்கியதால் பரபரப்பு


ஏரியூர் அருகே தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த மகன், சாலையில் சென்றவர்களையும் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

ஏரியூர்

லாரி உரிமையாளர்

தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள ராமகொண்ட அள்ளி ஊராட்சி மலையனூர் அங்கப்பன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் குமரன் (வயது 70), விவசாயி. இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், குணசேகரன், தங்கராஜ் (40) என்ற 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இவர்களில் தங்கராஜ் லாரி உரிமையாளராக உள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். தங்கராஜ் தற்போது புதிதாக வீடு கட்டிக்கொண்டு உள்ளார். வீடு கட்டி தரும் ஒப்பந்ததாரர், உரிய முறையில் வீட்டை கட்டவில்லை என அவர் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தங்கராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று இருந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தில் உள்ளவர்களிடமும், அக்கம் பக்கத்து வீட்டாரிடமும் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் இரவு முழுவதும் கூச்சல் போட்டு கொண்டு இருந்துள்ளார்.

சரமாரியாக தாக்கினார்

இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் கையில் இரும்பு கம்பியுடன் தங்கராஜ் சாலைக்கு வந்துள்ளார். அங்கு அவர் சாலையில் ெசன்றவர்களையும் தாக்கி உள்ளார்.

இதனிடையே பால் லோடு ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை தங்கராஜ் ரோட்டில் நின்று மறித்து உள்ளார். உடனே டிரைவர் மணிகண்டன் அந்த வண்டியை நிறுத்தி உள்ளார்.

இதையடுத்து தங்கராஜ் அந்த வண்டியின் கண்ணாடியை இரும்பு கம்பியால் தாக்கி உடைத்ததுடன், வண்டிக்குள் இருந்த டிரைவர் மணிகண்டனையும் தாக்கி உள்ளார்.

போலீசார் விரைந்தனர்

இதில் தலையில் காயமடைந்த சரக்கு வேன் டிரைவர் மணிகண்டன் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து ஏரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அப்போது காட்டு கூச்சல் போட்டுக்கொண்டு சாலையில் செல்பவர்களை விரட்டி கொண்டிருந்தார் தங்கராஜ். அவரை பிடிக்க முற்பட்ட போலீசாரையும் உள்ளூர் மக்களையும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் அவர் துரத்தி உள்ளார். கையில் இருக்கும் இரும்பு கம்பிைய பார்த்து அனைவரும் பயந்து ஓடி உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

அதன்பிறகு உள்ளூர் வாலிபர்கள் மற்றும் போலீசார் இணைந்து தங்கராஜை விரட்டி பிடித்து கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டனர். அதன் பிறகே அவரது வீட்டு அருகில் போலீசாரும், பொதுமக்களும் சென்றனர்.

தந்தை கொலை

அப்போது அங்கு வீட்டின் வாசல் பகுதியில் தங்கராஜின் தந்தை குமரன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அருகில் சென்று பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

தங்கராஜ் இரும்பு கம்பியால் தந்தையை அடித்துக்கொன்று விட்டு அதன்பிறகு அவர் கண்ணில் கண்டவர்களை எல்லாம் தாக்க முயன்ற விவரம் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

தங்கராஜை கயிற்றால் கட்டிப்போட்ட பிறகு தான் அவர் அருகிலும், இறந்து கிடந்த அவரது தந்தையின் உடல் அருகிலும் மற்றவர்கள் செல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது.

கைது

இதையடுத்து குமரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் தங்கராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகனே, தந்தையை அடித்துக்கொன்ற பயங்கர சம்பவம் ஏரியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story