கெலமங்கலம் அருகே இசை கலைஞர் அடித்துக்கொலை 3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


கெலமங்கலம் அருகே  இசை கலைஞர் அடித்துக்கொலை  3 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

கெலமங்கலம் அருகே முன்விரோதத்தில் இசை கலைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

தரப்பில் கூறப்பட்டதாவது:-

இசை கலைஞர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள தொட்ட பேளூர் கிராமத்தை சேர்ந்தவர் லகுமப்பா (வயது 42). பறை இசை கலைஞர். இவருடைய அண்ணன் முனிராஜ் (45). இவர்களுக்கு எருது விடும் விழாவில் தகராறு ஏற்பட்டது.

அப்போது முனிராஜிற்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த சக்ரலப்பா மகன் தேவராஜ் (28), சிக்கன்ணா மகன் விஜய் (26), இவரது தம்பி சதீஷ் (22) ஆகிய 3 பேரும் வந்து லகுமப்பாவிடம் தகராறு செய்தனர். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

பரிதாப சாவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லகுமப்பா மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது தேவராஜ், விஜய் மற்றும் சதீஷ் ஆகிய 3 பேரும் அவரை வழிமறித்து கத்தி மற்றும் கட்டையால் சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் தேவராஜ் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதையடுத்து குடும்பத்தினர் படுகாயம் அடைந்த லகுமப்பாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

3 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று லகுமப்பா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா விசாரணை நடத்தினார்.

மேலும் கெலமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இசை கலைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story