சின்னசேலம் ஏரியில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் பொக்லைன் எந்திரம் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவு
சின்னசேலம் ஏரியில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் பொக்லைன் எந்திரம் மூலம் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவிட்டுள்ளார்.
சின்னசேலம்,
சின்னசேலம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி சின்னசேலம் நகரில் 24 விநாயகர் சிலைகளும், சுற்றியுள்ள கிராமப்புறங்களில் 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. சிலைகள் வைத்துள்ள இடங்களில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த விநாயகர் சிலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை சின்னசேலம் ஏரியில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சின்னசேலம் காந்தி நகர், மீனவர் தெரு, கடைவீதி, நயினார்பாளையம் ரோடு ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் பார்வையிட்டார். பின்னர் சிலைகள் கரைக்க உள்ள சின்னசேலம் ஏரியையும் பார்வையிட்டார். அப்போது ஏரியில் தண்ணீர் நிரம்பி இருந்தது.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், சின்னசேலம் ஏரியில் தண்ணீர் நிரம்பி இருப்பதாலும், ஏரியில் ஆழம் அதிகமாக இருப்பதாலும் ஏரிக்குள் இறங்கி யாரும் விநாயகர் சிலைகளை கரைக்கக்கூடாது., பொக்லைன் எந்திரம் மூலம் மட்டுமே சிலைகளை கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.