கார் வாங்கி கொடுக்காததால் 2 குழந்தைகளுடன் ஆசிரியை வீட்டில் இருந்து விரட்டியடிப்பு கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
பண்ருட்டி அருகே 2 குழந்தைகளுடன் ஆசிரியையை வீட்டில் இருந்து விரட்டியடித்த கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி,
பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் அருள் பிரகாசம்(வயது 33). இவர் பண்ருட்டியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை சூர்யா(28) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இதற்கிடையே திருமணத்தின் போது சூர்யாவின் பெற்றோர், 30 பவுன் நகை, ரூ.2 லட்சம் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் கார் வாங்கி கொடுப்பதாகவும் கூறி இருந்தனர். ஆனால் அவர்களால் கார் வாங்கி கொடுக்க முடியவில்லை என தெரிகிறது. பின்னர் வாங்கி தருவதாக சூர்யாவின் பெற்றோர் கூறியிருந்தனர்.
வீட்டை விட்டு விரட்டியடிப்பு
இதனால் மேற்கொண்டு நகை, பணம் வரதட்சணையாக வாங்கி வருமாறு, சூர்யாவை அருள்பிரகாசம் அடித்தும், கொலை மிரட்டல் விடுத்தும் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் சூர்யாவையும், 2 குழந்தைகளையும் அருள்பிரகாசம் வீட்டில் இருந்து விரட்டி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டிற்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என்றும் அவர் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சூர்யா பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அருள்பிரகாசம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.