குடிபோதையில் தந்தை அடித்து துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறிய அக்காள்- தம்பி மீட்பு
குடிபோதையில் தந்தை அடித்து துன்புறுத்தியதால் வீட்டை விட்டு வெளியேறிய அக்காள்- தம்பி மீட்கப்பட்டனா்
கோபி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாதன், ஆறுமுகம், தலைமை காவலர் சதாசிவம் மற்றும் போலீசார் கோபி பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பயணிகளிடம் ஒரு சிறுமியும், சிறுவனும் பஸ்சில் டிக்கெட் எடுக்க பணம் வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தனர். இதை கண்டதும் அவர்கள் 2 பேரையும் போலீசார் மீட்டு புறக்காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், 'அவர்கள் கோபி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளியின் 14 வயது மகள், மற்றும் 11 வயது மகன் ஆவர். கோபி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சிறுமி 8-ம் வகுப்பு படித்து முடித்து உள்ளார். சிறுவன் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் 8-ம் வகுப்புக்கு பின்னா் சிறுமியை 9-ம் வகுப்பு படிக்க வைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாய் இறந்ததால் பாட்டி பராமரிப்பில் வளர்ந்து வந்த அவர்கள் 2 பேரையும், குடிபோதையில் தந்தை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர்கள் 2 பேரும் கோபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக வந்து உள்ளனர். ஆனால் முகவரி தெரியாததால் கோபி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது,' தெரியவந்தது. இதையடுத்து அக்காள், தம்பியை மீட்டு அவர்களுடைய உறவினர் ஒருவர் வீட்டுக்கு போலீசார் அனுப்பி வைத்ததுடன், அவர்கள் 2 பேரையும் நம்பியூரில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி படிக்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் போலீசார் செய்து வருகின்றனர்.