ஆண் நண்பருடன் பேசியதை தந்தை கண்டித்ததால்10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
ஆண் நண்பருடன் பேசியதை தந்தை கண்டித்ததால் ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆண் நண்பருடன் பேசியதை தந்தை கண்டித்ததால் ஈரோட்டில் 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10-ம் வகுப்பு மாணவி
ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி ரோட்டை சேர்ந்தவர் சங்கர் (வயது 51). தையல் தொழிலாளி. இவருடைய மனைவி கீதா. இவர்களுடைய மகள்கள் ஸ்ரீமிதா (18), ஹர்சினி (16).
இந்தநிலையில் சங்கருக்கும், கீதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கீதா விவாகரத்து பெற்று வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார். இதனிடையே தற்போது சங்கருடன் அவரது இளைய மகள் ஹர்சினி வசித்து வந்தார்.
ஹர்சினி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் துணைத்தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்து இருந்தார். அவருக்கு நேற்று முன்தினம் தேர்வு நடந்தது. தேர்வுக்கு செல்வதற்காக அவர் தயாராகி கொண்டு இருந்தார். அப்போது சங்கர் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார்.
தூக்கில் தொங்கினார்
சிறிது நேரத்திலேயே சங்கர் மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அப்போது ஹர்சினியிடம் பேசிக்கொண்டு இருந்த அவரது ஆண் நண்பர் வீட்டை விட்டு வெளியே ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் வீட்டுக்குள் சென்று ஹர்சினியை கண்டித்தார். இதையடுத்து அந்த நபரை பற்றி விசாரிப்பதற்காக சங்கர் வீட்டுக்கு வெளியே சென்றார்.
அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதனால் கதவை உடைத்துக்கொண்டு சங்கர் உள்ளே சென்றார். அப்போது அங்கு ஹர்சினி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தாா்.
விசாரணை
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று தற்கொலை செய்த ஹர்சினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.