சரிவர இயக்கப்படாததால் அரசு பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்புஞ்சைபுளியம்பட்டியில் பரபரப்பு


சரிவர இயக்கப்படாததால் அரசு பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்புஞ்சைபுளியம்பட்டியில் பரபரப்பு
x

சரிவர இயக்கப்படாததால் அரசு பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டம் நடத்தினா்

ஈரோடு

சரிவர இயக்கப்படாததால் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையத்தில் அரசு பஸ்சை சிறைபிடித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பஸ் சிறைபிடிப்பு

புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் சரிவர இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்காக நேற்று காலை அரசு பஸ் ஒன்று பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சில் ஏறுவதற்காக 25-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

உடனே இதுகுறித்து பஸ்சின் டிரைவர், கிளை மேலாளருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். மேலும் சம்பவ இடத்துக்கு புஞ்சைபுளியம்பட்டி போலீசாரும் வந்தனர். இதையடுத்து பயணிகளை கிளை மேலாளர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது கிளை மேலாளரிடம் பயணிகள் கூறுகையில், 'கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக புஞ்சைபுளியம்பட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு அரசு பஸ் சரிவர இயக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பஸ் நிலையத்தில் 2 மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டி உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் ெதரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை,' என்றனர்.

பரபரப்பு

அதற்கு பயணிகளிடம் கிளை மேலாளர் பதில் அளிக்கையில், 'இனி வரும் காலங்களில் மேட்டுப்பாளையத்துக்கு பஸ் சரிவர இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். இதில் பயணிகள் சமாதானம் அடைந்து தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர். இதனால் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு பஸ் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story