சுயமரியாதை திருமணத்தை மறுத்ததால் கோபி சார்பதிவாளரை கண்டித்து திராவிடர் கழகத்தினர் தர்ணா


சுயமரியாதை திருமணத்தை மறுத்ததால் கோபி சார்பதிவாளரை கண்டித்து திராவிடர் கழகத்தினர் தர்ணா
x

சுயமரியாதை திருமணத்தை மறுத்ததால் கோபி சார்பதிவாளரை கண்டித்து திராவிடர் கழகத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனா்.

ஈரோடு

கடத்தூர்

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் வேணுகோபால். அவருடைய மகன் லெனின் (வயது26). எம்.எஸ்.சி படித்துள்ள இவர் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் உணவு கட்டுப்பாட்டு அலுவலராக வேலை செய்து வருகிறார். வால்பாறையை சேர்ந்த நடராஜ் என்பவரின் மகள் சிந்து (25). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். லெனினும், சிந்துவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்

அதைத்தொடர்ந்து லெனினும், சிந்துவும் வீட்டை விட்டு வெளியேறி கோபியில் உள்ள ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து காதல் தம்பதியினர் திருமணத்தை பதிவு செய்ய கோபியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்குள் சென்றுள்ளனர். ஆனால் சார் பதிவாளர் சுயமரியாதை திருமணத்தை பதிவு செய்ய மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் திராவிடர் கழக நிர்வாகிகள், வக்கீல்கள் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று கேட்டு்ள்ளனர். அதற்கு சார்பதிவாளர், போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி திருமணத்தை பதிவு செய்ய மறுத்துள்ளார். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். அதன்பின்னர் சார்பதிவாளர், லெனின்-சிந்து திருமணத்தை பதிவு செய்தார். இதனால் கோபி சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Related Tags :
Next Story