கடத்தப்பட்ட குழந்தை மீண்டும் கிடைத்ததால் குலசேகரன்பட்டினம் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்திய தம்பதி
கடத்தப்பட்ட குழந்தை மீண்டும் கிடைத்ததால் குலசேகரன்பட்டினம் கோவிலில் தம்பதியினர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
குலசேகரன்பட்டினம்:
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் அருகே மணவாளபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி ரதி (வயது 32). இவர்களுக்கு ராஜேஸ்வரி என்ற மகளும், ராஜசேகர், ஸ்ரீஹரிஷ் (1½) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். முத்துராஜூக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டதால், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டினர். அதன்படி கடந்த 28-ந்தேதி முத்துராஜ்-ரதி தம்பதியர் தங்களது குழந்தை ஸ்ரீஹரிசுடன் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
பின்னர் கோவிலில் தங்கியிருந்த அவர்களிடம் நைசாக பேசி பழகிய பெண் ஒருவர், அவர்களை திருச்செந்தூருக்கு அழைத்து சென்றார். பின்னர் ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பதாக கூறிய அந்த பெண், குழந்தை ஸ்ரீஹரிசை நைசாக கடத்தி சென்றார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்த குழந்தை ஸ்ரீஹரிசை மீட்டனர்.
கடத்தப்பட்ட குழந்தை மீண்டும் கிடைத்ததால் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில், நேற்று முன்தினம் முத்துராஜ்-ரதி தம்பதியர் தங்களது குழந்தை ஸ்ரீஹரிசுடன் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வந்தனர். குழந்தை ஸ்ரீஹரிசுக்கு குறவன் வேடம் அணிவித்த தம்பதியர், கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களிடம் காணிக்கை பெற்றும், மடிப்பிச்சை எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். இது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.