நகைக்கடனை தள்ளுபடி செய்யாததால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி வந்த பெண்


நகைக்கடனை தள்ளுபடி செய்யாததால்  உடலில் மண்எண்ணெய் ஊற்றி வந்த பெண்
x

நகைக்கடனை தள்ளுபடி செய்யாததால் உடலில் மண்எண்ணெய் ஊற்றி வந்த பெண்ணால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி

உத்தமபாளையம் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்த பரமசிவம் மனைவி பவுன்தாய். இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றிய நிலையில் வந்திருந்தார். நுழைவு வாயிலில் நின்று கொண்டு இருந்த போலீசார் மண்எண்ணெய் வாசம் வீசியதால் பவுன்தாயிடம் விசாரித்தனர். அப்போது அவர் வரும் வழியிலேயே உடலில் மண்எண்ணெய் ஊற்றியதாகவும், கூட்டுறவு வங்கியில் தனது நகைக்கடன் தள்ளுபடி செய்யாததால் தீக்குளிக்க திட்டமிட்டு வந்தாகவும் கூறினார். மேலும் அவரிடம் போலீசார் விசாரித்தபோது, "எரசக்கநாயக்கனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் என்னுடைய 40 கிராம் தங்க நகையை அடகு வைத்து கடந்த 2020-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கடன் பெற்றேன். ஆனால், எனது நகையுடன் மேலும் 200 கிராம் கூடுதலாக எடையளவில் சேர்த்து விட்டனர். இதனால், அரசு அறிவித்தபடி எனக்கு நகைக்கடன் தள்ளுபடி ஆகவில்லை. எனவே, எனது நகையை ஆய்வு செய்து எனக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். இதையடுத்து அவரை குறைதீர்க்கும் கூட்டத்தில் போலீசார் மனு கொடுக்க அனுப்பினர். பின்னர் அவருக்கு அறிவுரைகள் வழங்கி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story