ஓட்டலில் ஊற்றிய குருமாவில் பல்லி கிடந்ததால் பரோட்டா சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி-மயக்கம்


ஓட்டலில் ஊற்றிய குருமாவில் பல்லி கிடந்ததால்  பரோட்டா சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி-மயக்கம்
x

குருமாவில் பல்லி கிடந்ததால் பரோட்டா சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி-மயக்கம்

ஈரோடு

ஈரோட்டில் ஓட்டலில் ஊற்றிய குருமாவில் பல்லி கிடந்ததால் பரோட்டா சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது.

சாப்பிட சென்றனர்...

அறச்சலூர் ஓடாநிலை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). மாற்றுத்திறனாளி. இவர் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்காக தனது மனைவி அமுதா (40), உறவினர்களான சந்திரன் (48), சண்முகம் (32) ஆகியோருடன் சுரேஷ் (32) என்பவருக்கு சொந்தமான காரில் வாடகைக்கு எடுத்து வந்தனர்.

பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்றபோது, ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் சாப்பிட முடிவுசெய்தனர்.

குழம்பில் பல்லி

மாற்றுத்திறனாளியான செந்தில்குமார் மட்டும் ஓட்டலுக்கு செல்லாமல் காரில் உட்கார்ந்திருந்தார். அமுதா, சந்திரன், சண்முகம், டிரைவர் சுரேஷ் ஆகியோர் ஓட்டலுக்குள் சென்று பரோட்டா சாப்பிட்டனர். அப்போது ஓட்டல் ஊழியர் பரோட்டாவுக்கு குருமா ஊற்றினார். அதில் இறந்து போன பல்லி கிடந்தது.

இதைப்பார்த்ததும் சாப்பிட்டு கொண்டிருந்த அமுதா, சந்திரன், டிரைவர் சுரேஷ், சண்முகம் ஆகிய 4 பேரும் வாந்தி எடுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கினர். இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

நடவடிக்கை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது.

இதுகுறித்து சிகிச்சையில் இருந்த சுரேஷ் கூறும்போது, "பரோட்டாவுக்கு ஊற்றிய குருமாவில் கிடந்த பல்லியை பார்த்ததும் எங்களுக்கு வாந்தி வந்து விட்டது. இதுதொடர்பாக ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, அது பல்லி இல்லை கோழியின் கால் என்று கூறினார்கள். நாங்கள் அதனை செல்போனில் படம் எடுப்பதை பார்த்ததும், ஓட்டல் ஊழியர்கள் வந்து பல்லி விழுந்த குருமாவை எடுத்து கீழே ஊற்றி விட்டு, நாங்கள் சாப்பிட்ட இலையையும் அவசர அவசரமாக அப்புறப்படுத்தி விட்டனர். எனவே, சம்மந்தப்பட்ட ஓட்டல் மீது உணவு பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இந்த நிலையில் நேற்று இரவு 7.45 மணிக்கு ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையிலான குழுவினர், சம்பந்தப்பட்ட ஓட்டலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் 'ஓட்டலை சுகாதாரமாக பராமரிக்கும்படி' அங்கு பணியாற்றியவர்களிடம் ஆலோசனை கூறினர்.


Next Story