தாய் படிக்க வைக்காததால்சிறுமி விஷம் தின்று தற்கொலை
லால்குடி அருகே தாய் படிக்க வைக்காததால் சிறுமி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
லால்குடி அருகே தாய் படிக்க வைக்காததால் சிறுமி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
கூலி வேலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள செம்பழனி புதுகுடியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி உமா. இந்த தம்பதியின் மகள் சிவரஞ்சனி (வயது 17). குமார் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் உமா கூலி வேலைக்கு சென்று மகளை 10-ம் வகுப்பு வரை படிக்க வைத்தார்.
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது வேலை இன்றி கஷ்டப்பட்டு வந்த உமா மகளை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாமல் இருந்து வந்தார். தற்போது, கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பிய நிலையில் உமா மீண்டும் கூலி வேலைக்கு சென்றார்.
தற்கொலை
ஆனால் அவர் மகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கவில்லை. இதைத்தொடர்ந்து சிவரஞ்சனி வீட்டை கவனித்துக்கொள்ள உமா கூலிவேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் தன்னுடன் படித்த மாணவிகள் பள்ளிக்கு செல்வதை பார்த்த சிவரஞ்சனி தன்னையும் படிக்க வைக்குமாறு தாயிடம் கேட்டுள்ளார். இதற்கு தாய் மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த சிவரஞ்சனி கடந்த 1-ந்தேதி அன்று தாய் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிக்கு வைக்கும் விஷத்தை தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதைகண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.