மனைவி கொடுத்த புகார் எதிரொலி:போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால்டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை தென்தாமரைகுளம் அருகே பரிதாபம்


மனைவி கொடுத்த புகார் எதிரொலி:போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால்டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை தென்தாமரைகுளம் அருகே பரிதாபம்
x

தென்தாமரைகுளம் அருகே மனைவி கொடுத்த புகாரால் போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால், வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்:

தென்தாமரைகுளம் அருகே மனைவி கொடுத்த புகாரால் போலீஸ் விசாரணைக்கு அழைத்ததால், வேன் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேன் டிரைவர்

தென்தாமரைகுளம் அருகே உள்ள ஈத்தங்காடை அடுத்துள்ள நாராயணன் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 34), பள்ளி வேன் டிரைவர். இவருடைய மனைவி குமாரி (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குமாரி வடசேரியில் உள்ள ஆவின் பாலகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

ஜெகதீசுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், கடன் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

போலீசில் புகார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெகதீஷ் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து குமாரியை அடித்துள்ளார். இதுபற்றி குமாரி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து போலீசார் ஜெகதீஷை 11-ந்தேதி (நேற்று) காலையில் விசாரணைக்கு வருமாறு கூறி உள்ளனர். இந்த நிலையில் குமாரி வழக்கம்போல் நேற்று அதிகாலையில் 5.30 மணிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

தற்கொலை

காலை 9 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் சமையலறையில் ஜெகதீஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குமாரி தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் ஜெகதீசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணைக்கு பயந்து ஜெகதீஷ் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்தது.


Next Story