மழை தண்ணீர் உள்ளே விழுந்ததால்அரசு பஸ்சில் குடைபிடித்தபடி சென்ற பயணிகள்
மழை தண்ணீர் உள்ளே விழுந்ததால் அரசு பஸ்சில் பயணிகள் குடைபிடித்தபடி சென்றனா்.
தாளவாடி
தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு நேற்று மதியம் 2 மணி அளவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் மாலை 4 மணி அளவில் புளிஞ்சூர் அருகே சென்றபோது அந்த பகுதியில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பஸ்சின் மேற்கூரையில் ஆங்காங்கே உள்ள துவாரத்தின் வழியாக மழைநீர் ஒழுகியபடியே இருந்தது.
இதன் காரணமாக சில பயணிகள் நின்றுகொண்டே தாங்கள் இறங்கும் நிறுத்தம் வரை பஸ்சுக்குள் நனைந்தபடியே பயணம் செய்தனர். மேலும் குடை வைத்திருந்த பயணிகள் நனையாமல் இருக்க பஸ்சுக்குள்ளே குடை பிடித்தபடி பயணம் செய்ததையும் காண முடிந்தது. இதுசம்பந்தமான புகைப்படம், வீடியோ வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறும்போது, 'மலைப்பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகி வருகின்றன. மேலும் பஸ்களின் மேற்கூரை உடைந்து காணப்படுவதால், மழை பெய்யும் போது துவாரங்கள் வழியாக மழைநீர் கொட்டுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனால் பஸ்சில் பயணம் செய்யும்போது நனைந்து கொண்டே பயணிக்கும் அவல நிலை உள்ளது. இதனால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மலைப்பகுதியில் நல்லதரமான அரசு பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
தாளவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழையும், ஒரு சில இடங்களில் பரவலாகவும் மழை பெய்து வருகிறது. இதனால் தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்தபடி சென்று வருகிறது. இதன் காரணமாக கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.