வேலைவாய்ப்பு வழங்கும் தொழில்முனைவோராக மாற வேண்டும்அமைச்சர் மூர்த்தி பேச்சு-
இளைஞர்கள் வேலைவாய்ப்பை தேடி அலையாமல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பை தேடி அலையாமல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறினார்.
உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி
தமிழக அரசின், "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு" என்ற தலைப்பில் மேல்நிலைக்கல்வி முடித்த மாணவ, மாணவிகளின் உயர்கல்விக்கான வழிகாட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை விரகனூர் வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ, மாணவிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நிலையில் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் பிறமாநிலங்களுக்கு முன்னோடியாக திகழும் வகையில் "இல்லம்தேடி கல்வி" என்ற மகத்தான திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.
பெண்கள் உயர்கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கத்தில் அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, மாணவ, மாணவிகள் புத்தகப்படிப்பு மட்டுமின்றி, தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக "நான் முதல்வன்" என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தின் கீழ், மாணவ மாணவிகளுக்கு தமிழில் தனித்திறன் பெற சிறப்பு பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாக பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சி வழங்கப்படுகிறது. மேல்நிலைக்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தங்களது எதிர்காலம் குறித்த தெளிவான சிந்தனை இருக்க வேண்டும்.
தொழில்முனைவோர்
கல்வியில் உயர்ந்த கல்வி, தாழ்ந்த கல்வி என எதுவும் இல்லை. குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான பாடங்கள் தொடர்பான உயர்க்கல்வி வாய்ப்புகளை தேர்வு செய்ய வேண்டும். இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை தேடி அலைவதுடன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில் முனைவோர்களாகவும் உருவாக வேண்டும். மேல்நிலைக்கல்வி படித்து முடித்த மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு துறைகளில் உள்ள உயர்க்கல்விக்கான வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் "கல்லூரி கனவு" என்ற சிறப்பான இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனை மாணவ, மாணவிகள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடந்தது. இதில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து துறைசார் வல்லுனர்கள் எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் டாக்டர் அனீஷ்சேகர், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன், டி.ஆர்.ஓ. சக்திவேல், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.