ரெயில் நிலையங்களில் போலீஸ் குவிப்பு
ரெயில் நிலையங்களில் போலீஸ் குவிப்பு
உடுமலை
மத்திய அரசு அறிவித்துள்ள 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுமலை, மடத்துக்குளம் ரெயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
'அக்னிபத்' திட்டம்
நாட்டின் முப்படைகளில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திட்டத்தை வாபஸ் வாங்கக்கோரியும் வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி உடுமலை ரெயில் நிலையத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்சன் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தேன்மொழிவேல் (உடுமலை), பொன்ரகு (திருப்பூர் தனிப்பிரிவு), போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்கண்ணன், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, தாராபுரம் மதுவிலக்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், 50 போலீசார் ஆகியோர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ரெயில் நிலையத்தின் முன்பகுதி, பிளாட்பாரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மடத்துக்குளம்
இதேபோல் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ெரயில் நிலையங்களில் போராட்டம் நடத்தப்போவதாக ரகசிய தகவல் பரவியது. இதனால் எச்சரிக்கை அடைந்த போலீசார் மடத்துக்குளம் மற்றும் மைவாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திடீரென ெரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
--------------
தலா 2 காலம்
உடுமலை ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருப்பதை படத்தில் காணலாம்
--
மடத்துக்குளம் ரெயில்நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காட்சி.