பீட்ரூட் சாகுபடி
பீட்ரூட் சாகுபடியில் எவ்வாறு லாபம் சம்பாதிப்பது என்பது பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்
பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிற காய்கறிகளில் பீட்ரூட் ஒன்றாகும். இது குளிர் பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. மக்கள் இதை விரும்புவதற்கு காரணம் இதன் சுவை மட்டுமல்ல. அதுகொடுக்கும் பல்வேறு சத்துக்களும்தான்.
பீட்ரூட்டில் கால்சியம், இரும்பு, நார்ச்சத்து போன்றவை உள்ளதால் இதை சாப்பிடுவோர் பெரும் நன்மை அடைகிறார்கள். வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்சினைக்கு பீட்ரூட் சிறந்த நிவாரணியாக உள்ளது. உடல் பருமன் உள்ளவர்கள் இதை சாப்பிட்டால் கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும். ரத்த ஓட்டத்தை சீராக்கி இதயக் கோளாறுகளை சரிசெய்யும் தன்மை பீட்ரூட்டுக்கு உள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு இது மிகவும் உதவும். கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும் ஆற்றலும் இதற்கு உண்டு.
பீட்ரூட்டை சமைத்தும், சமைக்காமலும் உண்ணலாம். இதன் இலைகள் கீரையாகவும், கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதை பயிரிட்டு சாகுபடி செய்தால் விவசாயிகள் நல்ல லாபம் பார்க்கலாம்.
தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி போன்ற குளிர் பகுதிகளில் பீட்ரூட் விளைவிக்கப்பட்டு வந்தது. தற்போது திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதிகளிலும் விளைகிறது. பருவமழை பொழியும் இந்த குளிர் காலத்தில் முறையாக விதை நேர்த்தி செய்தால் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 20 முதல் 25 டன் வரை பீட்ரூட் மகசூல் கிடைக்கும்.