தூத்துக்குடியில் தனியார் நிதிநிறுவனம் முன்புஉறவினர்களுடன் பெண் தர்ணா போராட்டம்
தூத்துக்குடியில் தனியார் நிதிநிறுவனம் முன்பு உறவினர்களுடன் பெண் தர்ணா போராட்டம் நடத்தினார்.
தூத்துக்குடியில் தனது கணவரை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்களுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நிதி நிறுவனம்
தூத்துக்குடி அண்ணா நகர் மெயின் ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு தெற்கு காட்டன் ரோட்டை சேர்ந்த நவீதா என்பவர் சீட்டு பணம் செலுத்தி வந்தாராம். தொடர்ந்து ஆறு மாதங்கள் பணம் செலுத்தினாராம். 6 மாதம் முடிந்தவுடன் சீட்டு பணம் கேட்டாராம். இது தொடர்பாக நிதி நிறுவனத்துக்கும், நவீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தர்ணா
இந்த நிலையில் நேற்று கட்டிய பணத்தை வாங்கிக் கொள்ளுமாறு நிதி நிறுவனத்தினர் தெரிவித்தார்களாம். இதனால் நவீதாவின் கணவர் பியோ (வயது 43) அந்த நிறுவனத்துக்கு சென்று பணத்தை கேட்டு உள்ளார். அப்போது, நிதிநிறுவன ஊழியர்களுக்கும், பியோவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த நிதிநிறுவன ஊழியர்கள் பியோவை சரமாரியாக தாக்கினார்களாம். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் வெளியில் வந்தாராம். இதனை பார்த்த அவரது மனைவி நவீதா உறவினர்களுடன் அலுவலகத்துக்கு முன்பு மெயின் ரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நவீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் நவீதா போராட்டத்தை கைவிட்டார். இந்த நிலையில் காயம் அடைந்த பியோ சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பியோ தாக்கியதாக, நிதி நிறுவன உரிமையாளர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்து உள்ளார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.