கலெக்டர் அலுவலகம் முன்புவன வேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்:கழிவு நீர் அகற்றும் வாகனங்களுடன் வந்ததால் பரபரப்பு
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு வன வேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வன வேங்கைகள் கட்சியினர் 20-க்கும் மேற்பட்ட கழிவு நீர் அகற்றும் வாகனங்களுடன் நேற்று வந்தனர். அந்த வாகனங்களை சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி விட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட தொழிற்சங்க தலைவர் கருப்பையா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கழிவு நீர் அகற்றும் வாகன பணியாளர்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க கோரி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் 'தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கழிவு நீர் அகற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் பணியாளர்கள் திறந்த நிலை வாகனத்தில் சின்டெக்ஸ் தொட்டி வைத்து கழிவு நீர் அகற்றும் பணியை செய்ய கூடாது. மோட்டார் கம்பரசர் பொருத்திய டேங்கர் லாரி மூலமாக மட்டும் கழிவு நீரை அகற்ற வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்கள் மூலம் எந்த முன்னறிவிப்புமின்றி கழிவு நீர் வாகன பணியாளர்களை தொழில் செய்ய விடாமலும் வாகனத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் இந்த தொழிலை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே கழிவு நீர் வாகன பணியாளர்கள் தொடர்ந்து பாதுகாப்பான முறையில் அரசு விதிமுறைக்கு கட்டுப்பட்டு பணிசெய்து பிழைப்பு நடத்த வழிவகை செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு கழிவு நீர் வாகனத்துடன் வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.