மாநகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்


மாநகராட்சி அலுவலகம் முன்பு   மக்கள் போராட்டம்
x

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கமிஷனரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

வேலூர்

வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர். மேலும் கமிஷனரிடம் கோரிக்கை மனுவும் அளித்தனர்.

வீடுகளுக்கு நோட்டீஸ்

வேலூர் மாவட்டத்தில் நீர்நிலை பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அகற்றப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வேலூர் மாநகராட்சியில் பலவன்சாத்து ஏரி பகுதியில் பலர் பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வருவாய்த்துறையினர் அங்கு சென்று அளவீடு செய்தனர். அதில் சுமார் 234 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து மாநகராட்சி சார்பில் தற்போது 234 வீடுகளையும் அகற்றிக்கொள்ள நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பலவன்சாத்து பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று காலை வேலூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் அவர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

பேரிகார்டுகள் வைத்து...

இதையொட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரஜினிகாந்த், முத்துக்குமார் மற்றும் போலீசார் பேரிகார்டுகள் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுமக்களை தடுத்து நிறுத்திய போலீசார், போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று கூறியதுடன், இங்கு போராட்டம் நடத்தக்கூடாது என்றும் தெரிவித்தனர்.

இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாநகராட்சி கமிஷனர் அசோக் குமாரை சந்தித்து கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், பலவன் சாத்து ஏரி பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறோம். இதில் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பலர் உள்ளனர். ஏரி தண்ணீர் எங்கள் குடியிருப்பு பகுதிக்கு எப்போதும் வருவது கிடையாது. எங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை. எனவே இந்த நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். எங்களுக்கு வீட்டுமனை பட்டாவும் வழங்க வேண்டும் என்று அதில் அவர்கள் கூறியிருந்தனர்.

பரபரப்பு

மனுவை பெற்றுக் கொண்ட மாநகராட்சி கமிஷனர், கோரிக்கை தொடர்பாக அனைவரும் மனு எழுதி அதில் உங்களுடைய ஆவணங்களை இணைத்து 3-ம் மண்டல அலுவலகத்தில் கொடுங்கள். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். போராட்டம் செய்ய திரண்ட மக்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story