ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு ரோட்டில் உருண்டு போராட்டம் நடத்திய பெண் ஆட்டோ டிரைவர்


ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு ரோட்டில் உருண்டு போராட்டம் நடத்திய பெண் ஆட்டோ டிரைவர்
x

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு ரோட்டில் உருண்டு பெண் ஆட்டோ டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஈரோடு

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு ரோட்டில் உருண்டு பெண் ஆட்டோ டிரைவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

ஆட்டோ டிரைவர்

ஈரோடு ஓடைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி கீதா (39). இவரும் ஆட்டோ ஓட்டி வருகிறார். போதை பழக்கத்துக்கு அடிமையான சந்திரசேகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

இவர்களுக்கு 19 வயதுடைய ஒரு மகன் உள்ளார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரை காணவில்லை. இதனால் இதுகுறித்து கீதா போலீசில் புகார் தெரிவித்தார். பின்னர் 2 நாட்கள் கழித்து மகன் வீட்டுக்கு வந்துவிட்டார்.

ரோட்டில் உருண்டு...

இந்த நிலையில் தனது கணவர், மகன் ஆகிய 2 பேரும் போதை பழக்கத்துக்கு அடிமையானதால், போதைப்பொருள்கள் விற்பனையை தடுக்கும் நோக்கத்தில், அவற்றை தயாரிக்கும் இடம், விற்பனை செய்யும் இடம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஈரோடு டவுன் போலீசில் கீதா புகார் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று காலை 10 மணியளவில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, திடீரென எதிரில் உள்ள பெருந்துறை ரோட்டில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் கீதாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அப்போது அவர் கூறும்போது, 'கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் ஈரோடு மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போதைப்பொருள்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இதைத்தொடர்ந்து போலீசார், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி, சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு ரோட்டில் உருண்டு பெண் ஆட்டோ டிரைவர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story