ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்புதண்ணீரை ஊற்றி தீக்குளிப்பதுபோல் நாடகமாடியவரால் பரபரப்பு


ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்புதண்ணீரை ஊற்றி தீக்குளிப்பதுபோல் நாடகமாடியவரால் பரபரப்பு
x

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பதுபோல் நாடகமாடியவரால் பரபரப்பு ஏற்பட்டது

ஈரோடு

ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு, தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பதுபோல் நாடகமாடியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தற்காலிக பணி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் ராசு (வயது 40). இவர், அதே பகுதியில் ஆவின் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கூட்டுறவு பால் விற்பனை நிலையத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தற்காலிக பணியில் சேர்ந்தார். அவருக்கு மாதம் ரூ.5 ஆயிரத்து 500 ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அந்த பால் விற்பனை நிலையத்தில் வேறு நபர்களுக்கு வேலை வழங்கிவிட்டு, ராசுவை வேலையை விட்டு நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று அவர், ஆவின் நிர்வாகத்திலும், ஈரோடு கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்துள்ளார். எனினும் இதுவரை அவருக்கு வேலை கிடைக்கவில்லை.

தீக்குளிக்க முயற்சி...

இதனால் ராசு, நேற்று காலை மீண்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகம் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக பிரதான வாயிலில் நின்று கொண்டு இருந்த அவர் திடீரென தான் வைத்திருந்த பாட்டிலை திறந்து மண் எண்ணெயை ஊற்றுவது போல் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர் கையில் இருந்த பாட்டிலை பிடுங்கி, அவரை மீட்டு தனியாக அழைத்து சென்றனர். பின்னர் அவருடைய உடலில் தண்ணீரையும் ஊற்றினர்.

நாடகம்

ஆனால் ராசுவின் உடலில் மண்எண்ணெய் வாசம் வீசாததால் சந்தேகம் அடைந்த போலீசார் பாட்டிலை எடுத்து சோதித்து பார்த்தனர். அப்போது அது மண்எண்ணெய் இல்லை என்பதும், துணிகளுக்கு பயன்படுத்தப்படும் நீல நிற சாயம் கலந்த தண்ணீர் என்பதும் தெரியவந்தது. தனக்கு வேலை வழங்காததால், தீக்குளிக்க முயன்றதுபோல் நாடகம் ஆடியதாக ராசு தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் ராசுவை, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கிற்கு அழைத்து சென்று, அவர் வைத்திருந்த மனுவை கலெக்டரிடம் கொடுக்க செய்தனர். பின்னர் அவரை சூரம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story