மாலைநேர உழவர் சந்தை தொடக்கம்


மாலைநேர உழவர் சந்தை தொடக்கம்
x

பழனியில் மாலைநேர உழவர் சந்தை தொடங்கப்பட்டது.

திண்டுக்கல்

பழனி அண்ணாநகரில் உள்ள உழவர் சந்தையில் 120 கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்கின்றனர். இங்கு காலை 6 மணிக்கு தொடங்கி காலை 9 மணி வரை வியாபாரம் நடைபெறுகிறது. விளைபொருட்களை நேரடியாக விற்பதாலும், மார்க்கெட்டை விட குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பதாலும் விவசாயிகள், பொதுமக்கள் என இருதரப்பினரும் பயன்பெறுகின்றனர். இந்தநிலையில் காலையில் மட்டுமே இயங்கும் உழவர்சந்தையை மாலையிலும் தொடங்க அரசு முடிவு செய்தது. அதன்படி, பழனி அண்ணாநகரில் உள்ள உழவர் சந்தை, மாலை நேரமும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் வேளாண் அலுவலர் தினேஷ்குமார், உதவி அலுவலர் முரளி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து வேளாண்மை அதிகாரிகள் கூறும்போது, சோதனை அடிப்படையில் மாலைநேர சந்தை தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு சிறுதானியங்கள், காளான், நாட்டுக்கோழி முட்டை, பாரம்பரிய அரிசி, எண்ணெய் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவை விற்கப்படுகிறது. இந்த உழவர் சந்தை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்றனர். பொதுமக்கள் கூறுகையில், மாலைநேர உழவர் சந்தை தொடங்கப்பட்டது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் காய்கறிகளையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story