அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூடுதல் நிதி செலுத்த பயனாளிகள் எதிர்ப்பு

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூடுதல் நிதி செலுத்த பயனாளிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை போஸ்நகரில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் தலா ரூ.1 லட்சம் நிதியில் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் திட்டமதிப்பீடு தொகை செலவு அதிகமானதால் கூடுதலாக ரூ.50 ஆயிரம் நிதி செலுத்த அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் அரசின் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடுதல் நிதி செலுத்த பயனாளிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நேற்று காலை குடியிருப்புகள் முன்பு பயனாளிகள் திரண்டனர். மேலும் பிருந்தாவனம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அதிகாரிகள் மற்றும் டவுன் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பின் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் சிறிது நேரம் பரபரப்பானது.