டயர் வெடித்து கார் மரத்தில் மோதி பெங்களூரு வியாபாரி சாவு


டயர் வெடித்து கார் மரத்தில் மோதி பெங்களூரு வியாபாரி சாவு
x

ஆரணி அருகே டயர் வெடித்து கார் மரத்தில் ேமாதிய விபத்தில் பெங்களூரு வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே டயர் வெடித்து கார் மரத்தில் ேமாதிய விபத்தில் பெங்களூரு வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

வியாபாரி

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெயா நகர் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவரின் மகன் அகரம் அகமத் (வயது 24), கோரப்பட்டு நூல் வியாபாரம் செய்து வந்தார்.

இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ஒண்ணுபுரம், சேவூர் பகுதியில் உள்ள பட்டு சேலை உற்பத்தியாளர்களிடம் கோரப்பட்டு நூல் வழங்குவதற்காக நேற்று இரவு வந்தார்.

இன்று காலை சேவூர் பகுதியில் உள்ள பட்டு சேலை வியாபாரிகளுக்கு பட்டு கோரா கொடுத்துவிட்டு ஒண்ணுபுரம் பகுதியில் உள்ள பட்டு சேலை வியாபாரிகளை சந்திப்பதற்காக அகரம் அகமத், டிரைவர் முத்தீஸ் பாஷா ஆகிய இருவரும் காரில் சென்றனர்.

டயர் வெடித்து மரத்தில் மோதியது

ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சோமந்தாங்கல் அருகே செல்லும்போது திடீரென காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முன் பகுதியில் அமர்ந்திருந்த அகரம் அகமத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் முத்தீஸ்பாஷாவுக்கு இருகால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அந்த வழியாக சென்ற பொதுமக்கள் படுகாயம் அடைந்த முத்தீஸ் பாஷாவை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மீனாட்சிசுந்தரம், ஜெயபால் மற்றும் போலீசார் விரைந்து சென்று இறந்த அகரம் அகமத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த அகரம் அகமதுக்கு குல்சூட் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் தான் ஆகிறது. மனைவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story