பெங்களூரு-சென்னை சாலையில் தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டரால் பரபரப்பு


பெங்களூரு-சென்னை சாலையில் தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டரால் பரபரப்பு
x

வேலூர் அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஓடும்போதே தீப்பிடித்த ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது.

வேலூர்

தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டர்

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). இவர், நேற்று வேலை விஷயமாக வேலூர் நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கருகம்புத்தூர் அருகே மதியம் 12 மணி அளவில் வந்த போது திடீரென ஸ்கூட்டரின் பின்பகுதியில் இருந்து புகை வெளியேறியது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சரவணன் அலறியடித்தபடி உடனடியாக ஸ்கூட்டரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதனை கண்ட அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சரவணன் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சென்று தண்ணீரை வாங்கி ஸ்கூட்டர் மீது ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மள மள வென்று பற்றி எரிந்தது.

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையம், வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் தணிகைவேல் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஸ்கூட்டர் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர். ஆனால் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது. நெடுஞ்சாலையில் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஓடும்போதே ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததை கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்கூட்டரின் பேட்டரியில் இருந்து வெளியேறிய தீப்பொறியால் தீவிபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. பழுதடைந்த பேட்டரி மற்றும் வாகனத்தின் உதிரிபாகங்களை அவ்வப்போது சீரமைத்தால் தீவிபத்து ஏற்படாது என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story