வெண்கல பதக்கம் வென்ற தேஜஸ்வின் சங்கருக்கு பாராட்டு
மதுரையை சேர்ந்த தடகள வீரர் தேஜஸ்வின் சங்கர் (வயது 23) பெர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டு உயரம் தாண்டுதலில் வெண்கல பதக்கம் வென்றார். இவர் இந்தியா சார்பில் உயரம் தாண்டுதலில் முதல் முறையாக பதக்கம் வென்றுள்ளார். இவருக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த மதன் பவுண்டேஷன் சார்பில் தேஜஸ்வின் சங்கருக்கு பாராட்டு விழா திமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் ஓட்டலில் நடைபெற்றது. விழாவில் இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகத்தின் தலைவர் சக்திவேல் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற முன்னாள் தடகள வீராங்கனை ஷைனி வில்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் தேஜஸ்வின் சங்கரை பாராட்டும் வகையில் பொன்னாடை போர்த்தி, ஊக்கத்தொகையாக ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும் அவருடைய பயிற்சியாளர் சுனில்குமாருக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. முடிவில் தேஜஸ்வின் சங்கர் பள்ளிக்குழந்தைகளுடன் விளையாட்டு துறையில் சாதிப்பது குறித்து கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பதிலளித்தார்.