பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


பரமத்திவேலூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் அமைக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் அமைக்க வேண்டும் என்று வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

வெற்றிலை பயிர்

நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளையும் வெற்றிலைகள் கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தினந்தோறும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

குறிப்பாக பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் ஏராளமான ஏக்கர் நிலத்தில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டு வருவதால் இப்பகுதியில் உள்ள வெற்றிலை விவசாயிகள் நலன் கருதி, வெற்றிலை ஆராய்ச்சி மையம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூரில் செயல்பட்டு வந்தது. ஆனால் அது தற்போது கோவையில் உள்ள ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டு விட்டது.

இதனால் வெற்றிலையில் பல்வேறு நோய்கள் பரவும்போது, ஒவ்வொரு முறையும் நோயின் தன்மை குறித்து உடனடியாக கண்டறிய முடியவில்லை. வெற்றிலை கொடிகள் காய்ந்து பெரும் இழப்பை ஏற்படுத்துவதால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே மீண்டும் பரமத்திவேலூர் தாலுகாவில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், பொத்தனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் மீண்டும் அமைக்கப்படும் என அறிவிப்பார்கள். ஆனால் இதுவரை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவில்லை.

4 ஏக்கர் நிலம்

இது குறித்து தமிழ்நாடு வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளர் வையாபுரி கூறியதாவது:-

பரமத்திவேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான காவிரி கரையோரத்திலும், தோட்டப்பகுதிகளிலும் ஆடிப்பட்டம், தைப்பட்டம் மற்றும் முதியம்பயிர் மற்றும் இளம்பயிர் என சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை பயிர் செய்யப்பட்டு உள்ளது. இத்தொழிலில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில் விளையும் வெற்றிலை தரமானதாக உள்ளதால் அதிக அளவில் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

குறிப்பாக மருத்துவ பயன்பாட்டிற்கு அதிக அளவில் வெற்றிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெற்றிலையில் இருந்து அதிக அளவில் மருந்துகளை தயாரிப்பதற்கு, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொண்டால் வெற்றிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். மேலும் கோவையில் உள்ள வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை மீண்டும் பரமத்திவேலூருக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை தொடங்குவதற்கு பரமத்தி வேலூர் அருகில் உள்ள இருக்கூர் பகுதியில் சுமார் 4 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் தற்போது அது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே இருக்கூர் பகுதியில் வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கு தற்போதைய அரசு முன் வர வேண்டும்.


Next Story