போடி-தேனி இடையே120 கிலோ மீட்டர் வேகத்தில் இறுதி கட்ட ரெயில் சோதனை ஓட்டம்


போடி-தேனி இடையே120 கிலோ மீட்டர் வேகத்தில் இறுதி கட்ட ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

போடி-தேனி இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் இறுதி கட்ட ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

தேனி

அகல ரெயில் பாதை

மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டப்பணி நடந்து வருகிறது. இதில், தேனி வரை பணிகள் முடிவடைந்ததையொட்டி பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. தற்போது போடி வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, கடந்த 2-ந்தேதி ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.

இதையடுத்து தேனி-போடி ரெயில் பாதையில் ரெயில் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா? வேறு ஏதேனும் சிறு குறைபாடுகள் இருக்கிறதா? என்பதை கண்டறிய நவீன ஆய்வு ரெயில் சோதனை ஓட்டம் கடந்த 9-ந்தேதி நடந்தது. அப்போது போடியில் இருந்து தேனி வரை 125 கிலோ மீட்டா் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. இந்நிலையில் போடி-தேனி ரெயில் பாதையில் இறுதிகட்ட ரெயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி தேனியில் இருந்து 3 பெட்டிகள் இணைக்கப்பட்ட ரெயில் போடிக்கு வந்தது.

சோதனை ஓட்டம்

முன்னதாக தேனி ரெயில் நிலையத்தில் இருந்து மோட்டார் டிராலி மூலம் பெங்களூரு தென் சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ரெயில் பாதையில் ஆய்வு மேற்கொண்டார். அப்ேபாது தேனி அருகே உள்ள வாழையாறு கொட்டக்குடி, பூதிப்புரம் ஆற்றுப்பாலங்கள் மற்றும் போடி- புதூர் ரயில்வே கேட் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் தெற்கு ரெயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி.கே.குப்தா, மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த், முதன்மை பொறியாளர் மஸ்தான் ராவ், முதன்மை கட்டுமான பொறியாளர் இளம் பூரணன், முதன்மை தொலை தொடர்பு பொறியாளர் பாஸ்கர் ராவ், முதன்மை மின் பொறியாளர் பாலாஜி, துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போடியில் இருந்து தேனிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது மாலை 3.27 மணிக்கு போடியில் இருந்து புறப்பட்ட ரெயில் 3.36 மணிக்கு தேனிக்கு சென்றடைந்தது. இதில் 15 கிலோ மீட்டர் தூரத்தை 9 நிமிடத்தில் ரெயில் கடந்து சென்றது.


Related Tags :
Next Story