கோவில்பட்டி-கடம்பூர் இடையேபுதியஇரட்டை மின்பாதையில்120 கி.மீ வேகத்தில் ரெயில்சோதனை ஓட்டம்
கோவில்பட்டி- கடம்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய இரட்டை மின்பாதையில் 120 கி.மீ.வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த பணியை தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி- கடம்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள புதிய இரட்டை மின்பாதையில் 120 கி.மீ.வேகத்தில் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இந்த பணியை தென்மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் நேற்று ஆய்வு நடத்தினார்.
இரட்டை ரெயில் மின்பாதை
தென் தமிழகத்தில் அதிவேக ரயில்களை இயக்கவும், பயண நேரத்தை குறைக்கும் வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் கடந்த 2018-ஆம் ஆண்டில் மதுரை- தூத்துக்குடி இடையிலான 160 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.11 ஆயிரத்து 822 கோடி செலவில் புதிதாக இரட்டை ரெயில் மின்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
ஏற்கனவே வாஞ்சி மணியாச்சி- தட்டப்பாறை, வாஞ்சி மணியாச்சி- கங்கைகொண்டான், வாஞ்சி மணியாச்சி- கடம்பூர் இடையேயாந பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் சோதனை ஓட்டம் நடந்துள்ளது.
ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
தற்போது கோவில்பட்டி- கடம்பூர் ரெயில் நிலையம் இடையே 22 கிலோமீட்டர் தூர மின்மய இரட்டை ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த புதிய மின்மய ரெயில் பாதையில் தெற்கு ரெயில்வே தலைமை முதன்மை பொறியாளர் ஏ. கே. சித்தார்த்தா ஆய்வு மேற்கொண்டார். நேற்று கோவில்பட்டி- கடம்பூர் புதிய மின்மய இரட்டை ரெயில் பாதையை ஆய்வு
நடத்த தென் மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் அதிவேக சோதனை ரெயிலில் கோவில்பட்டி வந்தார். அவருடன் ரெயில்வே முதன்மை கட்டுமான நிர்வாக அதிகாரி வி.ஜே.குப்தா, மதுரை கோட்ட மேலாளர் அனந்த், முதுநிலை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி மற்றும் அதிகாரிகள் வந்தனர். ரெயில் நிலைய வளாகத்தில் நடந்த சிறப்பு பூஜையில் இவர்கள் கலந்து கொண்டனர். காலை 10.10 மணிக்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கோவில்பட்டி ரெயில் நிலையத்திலிருந்து மோட்டார் ட்ராலியில் கடம்பூர் ரெயில் நிலையம் வரை ஆய்வு மேற்கொண்டார். அவரை தொடர்ந்து 6 மோட்டார் ட்ராலிகளில் அதிகாரிகள், இன்ஜினீயர்கள், ஊழியர்கள் சென்றனர்.
ரெயில் சோதனை ஓட்டம்
இந்த ஆய்வுப் பணியை யொட்டி, ரெயில் பாதையில் பொதுமக்கள், ரெயில் பாதை அருகே வசிப்பவர்கள் நடமாட தடைவிதிக்கப்பட்டு இருந்தது. மதியம் 1.30 மணிக்கு ஆய்வுப் பணி நிறைவடைந்தது. மாலை 4 மணிக்கு கோவில்பட்டி ரெயில் நிலையத்திலிருந்து அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட சோதனை ஓட்ட ரெயில் கடம்பூர் ரெயில் நிலையம் வரை 22 கிலோமீட்டர் தூரத்திற்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் கடம்பூர் ரெயில் நிலையம் வரை இயக்கப்பட்டது.
இந்த ஆய்வு பணியை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் திருச்செந்தூரில் இருந்து ரெயில் போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டிருந்தது.