மதுரை-போடி இடையே சிறப்பு ரெயிலை இயக்கி இறுதி கட்ட சோதனை
மதுரை-போடி இடையேயான ரெயில் பாதையில் சிறப்பு ரெயிலை இயக்கி இறுதி கட்ட சோதனை நடந்தது.
மதுரை-போடி ரெயில் பாதை
மதுரை-போடி இடையே மீட்டர்கேஜ் ரெயில்பாதை அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்டது. இந்த ரெயில்பாதையில் மதுரையில் இருந்து தேனி வரை கடந்த ஆண்டு முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. போடி வரை பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இந்த ரெயில் சேவையை போடி வரை நீட்டிக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து வருகிற 15-ந் தேதி முதல் இந்த முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் சேவை போடி வரை நீட்டிக்கப்பட உள்ளது. இதேபோல், சென்னை-மதுரை இடையே வாரம் 3 முறை இயக்கப்படும் சிறப்பு ரெயில் சேவையும் போடி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரெயில் சேவையும் வருகிற 15-ந்தேதி தொடங்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
இறுதி கட்ட சோதனை
இதற்கான பணிகள் போடி ரெயில் நிலையத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. போடி-சென்னை ரெயிலுக்கான முன்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போடி-மதுரை ரெயில் பாதையில் இறுதி கட்ட சோதனை நடந்தது. இதற்காக மதுரையில் இருந்து போடி வரை சிறப்பு ரெயிலை இயக்கி சோதனை நடந்தது.
இந்த சோதனையின்போது ரெயிலில் உள்ள அதிநவீன எந்திரங்கள் மூலம் ரெயில் பாதையின் அமைப்பு, தரம், அதிர்வுகள் தாங்கும் திறன் ஆகியவற்றை லக்னோவை சேர்ந்த மத்திய அரசின் வடிவமைப்பு தர ஆய்வு நிறுவனத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது திரளான பொதுமக்கள் போடி ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது ரெயிலை செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.