தேனி-போடி இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்


தேனி-போடி இடையே   120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் என்ஜின் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி-போடி இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் ெரயில் என்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது.

தேனி

மதுரை-போடி ரெயில் பாதை

மதுரை-போடி இடையே 90 கிலோமீட்டர் தூரத்துக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மீட்டர் கேஜ் ரெயில் பாதை திட்டம் தொடங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் விளையும் காபி, தேயிலை, ஏலக்காய் உள்ளிட்ட விளை பொருட்கள், இடுக்கி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய் போன்ற பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும், தேனி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள், வணிகர்களுக்கு தேவையான சரக்குகளை கொண்டு வருவதற்கும் இந்த ரெயில் பாதை திட்டம் மிகவும் பயன் அளித்தது.

இந்த ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற திட்டமிடப்பட்டது. இதற்காக சுமார் 83 ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்த ரெயில், கடந்த 2010-ம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டது. 5 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் இயக்கப்படும் என்ற அறிவிப்புடன் தண்டவாளங்களை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் போதிய நிதி ஒதுக்கீடு இன்றி பணிகள் முடங்கின. கடந்த 2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை சுமார் ரூ.127 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்த நிலையில், 2019-ம் ஆண்டுக்கு பிறகு பணிகள் தீவிரம் அடைந்தன.

சோதனை ஓட்டம்

இந்நிலையில் மதுரை-போடி இடையே அகல ரெயில் பாதை திட்டத்தில் மதுரை-தேனி வரை பணிகள் முடிவடைந்து கடந்த மே மாதம் முதல் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தேனி-போடி இடையேயான 15 கி.மீ. அகல ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த புதிய ரெயில் பாதையில் ஏற்கனவே ரெயில் என்ஜின் வெள்ளோட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து தேனி-போடி இடையே ரெயில் பாதையில் நேற்று காலை 10 மணி அளவில் ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் நடந்தது. இதற்காக தேனியில் இருந்து ரெயில் என்ஜின் போடிக்கு வந்தது. இதனை பொதுமக்கள் பாா்த்து ரசித்ததுடன் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும் என்ஜின் முன்பு நின்று செல்பி எடுத்து கொண்டனர். பின்னர் போடியில் இருந்து தேனிக்கு சோதனை ஓட்டம் தொடங்கியது. அதனை அதிகாரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அப்போது 120 கி.மீ வேகத்தில் புழுதி பறக்க ரெயில் என்ஜின் தேனி நோக்கி சென்றது. 15 கி.மீ. தூரத்தை 9 நிமிடம் 20 வினாடியில் அந்த ரெயில் என்ஜின் கடந்து சென்றது.

ரெயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்த நிலையில் தற்போது ரெயில் நிலையம் மற்றும் சிக்னல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ரெயில் நிலையம் முழுவதும் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்றதும் அடுத்த (ஜனவரி) மாதம் 15-ந்தேதிக்குள் தேனி-போடி இடையே ரெயில் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story