பள்ளி பாடங்களை தாண்டி வெளியுலகம் குறித்து மாணவ -மாணவிகள் கற்றுக்கொள்ள வேண்டும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தல்


பள்ளி பாடங்களை தாண்டி வெளியுலகம் குறித்து மாணவ -மாணவிகள் கற்றுக்கொள்ள வேண்டும்-  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தல்
x

பள்ளி பாடங்களை தாண்டி வெளியுலகம் குறித்து மாணவ -மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

நீலகிரி

குன்னூர்

பள்ளி பாடங்களை தாண்டி வெளியுலகம் குறித்து மாணவ -மாணவிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசினார்.

கோடைகால பயிற்சி முகாம்

தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் நோக்கத்துடனும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் களித்திடும் வகையிலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'புதியன விரும்பு' என்ற பெயரில் கோடை பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள பள்ளியில் தொடங்கப்பட்டது. இதற்கு அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

ரூ.72 லட்சம்

அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளமல்ல, பெருமையின் அடையாளம் ஆகும். எனவே கோடை கொண்டாட்டத்தை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்பதற்காக, 11-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு சில தேர்வுகள் வைக்கப்பட்டு, 1000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரூ.72 லட்சம் செலவில் இந்த பயிற்சி முகாம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த முகாமில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை வரவழைத்து அவர்கள் மூலம் 5 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வழங்கப்படுவது போல், இந்த முகாமில் மாணவ -மாணவிகளுக்கு தலைமை பண்பு, பெண்கள் உரிமை, சுற்றுச்சூழல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். அவர்களது தனித் திறமையை வெளிக்கொணரும் வகையில் பயிற்சி வகுப்பு அமையும்.

மேலும் கவிதை, கதை, குறும்படம் மற்றும் கலையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறப்படும்.

மரக்கன்றுகள் நட்டனர்

பள்ளிப் பாடங்களை மட்டும் தெரிந்துகொண்டால் போதாது வெளியுலகம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற வகையில் பயிற்சி வகுப்புகள் அமையும். இந்த திட்டம் குறித்து நன்றாக கலந்து ஆலோசித்து மேலும் புதுமைகளை கொண்டு வருவது குறித்து முடிவு செய்யப்படும். மலை மாவட்டங்களில் இலவச பஸ்பாஸ் அட்டைகளுக்கு ஏற்ப பஸ் வசதி இல்லை என்பதை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து துறை அமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும். பழங்குடியினர் கல்வி கற்க தேவையான விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோடைப் பயிற்சி முகாமில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவ- மாணவிகளுக்கு புத்தகப்பை மற்றும் கையேடுகளை வழங்கினார்.இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு குன்னூர் புனித ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மரக்கன்றுகள் நட்டனர்.


Next Story