நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது
தை அமாவாசையையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசையையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தை அமாவாசை
நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசையன்று பத்ர தீப திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. அன்று காலையில் கணபதி ஹோமம், சுவாமி வேணு வனநாதர் மூலஸ்தானத்தில் ருத்ர வழிபாடு மற்றும் அபிஷேக தீபாராதனைகளும், காந்திமதி அம்பாளுக்கு அபிஷேக தீபாராதனைகளும், அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி-அம்பாள், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக தீபாராதனைகளும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் மாலை 6.45 மணிக்கு சுவாமி சன்னதி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது.
பத்ர தீபம் ஏற்றப்பட்டது
விழாவின் சிகர நிகழ்ச்சியான பத்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு பால்குடம் எடுத்தலும், 11 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு 308 சங்காபிஷேகமும், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது.
மதியம் 12 மணிக்கு மகேசுவர பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. மாலை 6.50 மணிக்கு தங்க விளக்கில் இருந்து தீபம் ஏற்றி சுவாமி சன்னதிக்கு சென்று விட்டு நந்தி முன்பு தீபம் மேளதாளம் முழங்க ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுவாமி நெல்லையப்பர் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள், காந்திமதி அம்பாள் கோவிலில் உள் சன்னதி, வெளிப்பிரகாரங்கள் ஆகிய இடங்களில் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றப்பட்டது.
கோவிலில் உள்ள நின்றசீர்நெடுமாறன் கலையரங்கத்தில் பக்தி சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
வீதி உலா
இதைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஞ்சுறு வாகனத்திலும், சண்முகர் தங்க சப்பரத்திலும் சுவாமி சன்னதி வெளிப்பிரகாரத்தில் உலா வந்தனர்.
இரவு 10 மணிக்கு நெல்லை டவுன் 4 ரத வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகள், 63 நாயன்மார்களுடன் வீதி உலா நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அம்பை
தை அமாவாசையையொட்டி, அம்பை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காசிநாத சுவாமி கோவிலில் நேற்று பத்ர தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி வழிபட்டனர்.