பத்ரகாளியம்மன் சிலை உடைப்பு


பத்ரகாளியம்மன் சிலை உடைப்பு
x

சாணார்பட்டி அருகே பத்ரகாளியம்மன் சிலை உடைக்கப்பட்டது. ‘உங்களால் முடிந்ததை பாருங்கள்’ என சவால் விடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

பத்ரகாளியம்மன் சிலை உடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த நொச்சியோடைபட்டி அருகே கவராயப்பட்டியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்று வட்டார கிராமத்தினர் வழிபாடு செய்வது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் ஆடிமாத கடைசி வெள்ளியையொட்டி, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இரவில் கோவில் பூட்டப்பட்டது.

நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த அம்மன் சிலையின் 2 கைகளையும் உடைத்தனர். பின்னர் அந்த கைகளை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

போலீசுக்கு சவால்

இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், கோவிலில் உள்ள அம்மன் சிலையில் 2 கைகளும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு சென்று பார்த்தபோது, சிலையின் அருகே ஒரு துண்டுச்சீட்டு கிடந்தது. அது, தினசரி காலண்டரில் இருந்து கிழிக்கப்பட்ட தாள் ஆகும்.

அந்த தாளில், 'நான் தான் சிலையை உடைத்தேன். உங்களால் முடிந்ததை பாருங்கள்' என்று எழுதப்பட்டிருந் தது. அதன் கீழ்பகுதியில், கருப்பட்டி என அப்பகுதியை சேர்ந்த ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் சவால் விடும் வகையிலான வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். சிலை அருகே கிடந்த துண்டுச்சீட்டை, துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர்.

கருப்பட்டி என்ற பெயருடைய அப்பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அவரை ஒரு காகிதத்தில் எழுத சொல்லி, கையெழுத்தை ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் 2 எழுத்துக்களும் ஒத்துப்போகவில்லை. இதனால் அவரை சிக்க வைப்பதற்காக, மர்ம நபர்கள் கருப்பட்டி என்பவரின் பெயரை பயன்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதனையடுத்து அவருக்கு, வேண்டாத நபர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Next Story