பகவதி அம்மன் கோவிலில்வைகாசி விசாக திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தென்தாமரைகுளம்,
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
வைகாசி திருவிழா
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் 2-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் திருவிழாவான 1-ந் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. அன்று காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்ட நிகழ்ச்சி தொடங்குகிறது. 10-ம் திருவிழாவான 2-ந் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறும்.
கால்நாட்டு நிகழ்ச்சி
இந்த வைகாசி விசாக திருவிழாவுக்கான கால்நாட்டு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் கோவில் மேல்சாந்திகள் பத்மநாபன், விட்டல், சீனிவாசன், நிதின் சங்கர், கண்ணன் மற்றும் கீழ் சாந்திகள் ராம் பிரகாஷ், ராமகிருஷ்ணன் ஆகியோர் கால்நாட்டு வைபவத்தை நடத்தினர்.
இதேபோல் கன்னியாகுமரி கீழரத வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரிலும், கன்னியம்பலம் மண்டபத்திலும் கால்நாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.