பரதராமி சோதனைச்சாவடி நவீன மயமாக்கப்படும்
சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்த பரதராமி சோதனைச்சாவடி நவீன மயமாக்கப்படும் என வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார்.
டி.ஐ.ஜி. ஆய்வு
கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில், வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது போலீஸ் நிலையம் எதிரில் மரக்கன்று நட்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சொத்துக்காக கொலை, ஆதாயக் கொலை, வழிப்பறி வழக்குகள், நீதிமன்ற வழக்குகள், சாலையின் அகலத்தை குறைக்கும் அளவுக்கு ஆக்கிரமிப்பு செய்தல் இவற்றின் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகள், பெட்டி வழக்குகள், கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் பராமரிப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
நவீனமயமாக்கப்படும்
கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்பாடுகளை கட்டுப்படுத்த ஆந்திர- தமிழக எல்லையில் அமைந்துள்ள பரதராமி சோதனைச்சாவடி நவீன மயமாக்கப்படும். இப்போதுள்ள கண்காணிப்பு கேமராக்களைவிட நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். குடியாத்தம்- காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டுகள், எச்சரிக்கை குறியீடுகள் போன்றவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பரதராமி போலீஸ் நிலையம்
அதைத்தொடர்ந்து பரதராமி போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது பதிவேடுகளை ஆய்வு செய்து, வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
பின்னர் பரதராமியை அடுத்த கன்னிகாபுரம் அருகே தமிழக-ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக காவல்துறையின் சோதனை சாவடியில் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், அண்ணாதுரை, ரவிக்குமார், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
தீவிர கண்காணிப்பு
தொடர்ந்து டி.ஐ.ஜி முத்துசாமி கூறுகையில், இந்த சோதனைச்சாவடியில் வெளி மாநிலங்களில் வரும் கனரக வாகனங்கள், பஸ்கள், லாரிகள், கார்கள் என தனித்தனியாக அதன் பதிவு எண்களை பதிவு செய்யப்படும். மாநில எல்லை பகுதியில் அமைந்துள்ளதால் காவல் துறையினர் விழிப்புடன் இருக்க வேண்டும். இரவு நேரங்களில் வாகனங்கள் மூலம் போதைப்பொருட்கள் கடத்தி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 4 போலீசார் தீவிர கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.