பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறைக்கு நிரந்தர இயக்குனரை நியமிக்க வேண்டும-செனட் சபை கூட்டத்தில் வலியுறுத்தல்


பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறைக்கு நிரந்தர இயக்குனரை நியமிக்க வேண்டும-செனட் சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 July 2023 12:28 AM IST (Updated: 23 July 2023 5:41 PM IST)
t-max-icont-min-icon

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறைக்கு நிரந்தர இயக்குனரை நியமிக்க வேண்டும் என்று செனட் சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறைக்கு நிரந்தர இயக்குனரை நியமிக்க வேண்டும் என்று செனட் சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

செனட் சபை கூட்டம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் செனட் சபை கூட்டம் பல்கலைக்கழக குளிர்மைய கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த தகவல் வழங்கப்பட்டது.

அப்போது பேரவையின் உறுப்பினர் பாரி ஒத்திவைப்பு தீர்மானத்தை வழங்கினார். அதில் உறுப்பினர்களுக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை, வரவு செலவு தணிக்கை அறிக்கை ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை. இணையம் வழியாக அனுப்பியதால் அது பல்வேறு உறுப்பினர்களுக்கு முழுமையாக படிக்க முடியவில்லை. அதனால் வரவு செலவு மற்றும் தணிக்கை அறிக்கையை துணைவேந்தர் இந்த கூட்டத்தில் படித்தால்தான் தொடர்ந்து கூட்டத்தை நடத்த வேண்டும் என தெரிவித்தார். இதனை மற்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

நிரந்தர புதிய இயக்குனர்

அப்போது தணிக்கை அறிக்கையில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உறுப்பினர் முத்துராமகிருஷ்ணன் புகார் தெரிவித்தார். அதற்கு துணைவேந்தர் மறுப்பு தெரிவித்து பேசினார்.

கூட்டத்தில் முனைவர் பட்ட படிப்பிற்கான நெறிமுறைகள் அடிக்கடி மாற்றுவதை தவிர்க்க வேண்டும். 4 ஆண்டுகளுக்கும் மேலாக பொறுப்பு வகிக்கும் ஆராய்ச்சி இயக்குனரை உடனடியாக விடுவித்து நிரந்தர புதிய இயக்குனரை நியமிக்க வேண்டும். ஒரு ஆராய்ச்சி மாணவர் தனது ஆய்வு கட்டுரையை தனது பிரிவிற்கான ஆய்விதழில் மட்டுமின்றி தேவையின் அடிப்படையில் வேறு ஒரு துறை சார்ந்த ஆய்விதழில் வெளியிடும் கட்டுரையை அங்கீகரிக்க வேண்டும். தேர்வாளர்களுக்கான மதிப்பீட்டு கட்டணங்களை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செனட் சபை உறுப்பினர்கள் பேசினர்.

நடவடிக்கை

இதற்கு துணைவேந்தர் செல்வம் பதிலளித்து பேசும்போது, உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஆட்சி குழுவில் பரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

கூட்டத்தில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கணேசன், தேர்வு நெறியாளர் சீனிவாச ராகவன், பாபு ராஜேந்திரன், சேகர் உள்ளிட்ட ஆட்சி குழு உறுப்பினர்கள், தொலைதூரக் கல்வி இயக்குனர் பழனிச்சாமி மற்றும் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story