பாரதீய ஜனதா கட்சியினர் சாலை மறியல்
வாய்மேட்டில் பாரதீய ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பன்னாள் கீழக்காடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (வயது40).இவர் பாரதீய ஜனதா கட்சியின் ஊராட்சி தலைவராகஉள்ளார். இவர், முகநூலில் தி.மு.க.வை பற்றி அவதூறாக பேசியதாக தி.மு.க.வினர் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் இளையராஜாவை கைது செய்தனர். இதனை கண்டித்து வாய்மேடு கடைத்தெருவில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. வேதாரண்யம் தெற்கு ஒன்றிய தலைவர் கரு. நாகராஜன் முன்னிலை வகித்தார். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் இளவேந்தன், ஒன்றிய பொதுச்செயலாளர் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகையன் உள்பட 30-க்கும் மேற்பட்ட பாரதீய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மலர்கொடி, வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் வாய்மேடு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்த பாரதீய ஜனதா கட்சியினர் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
---