பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து குறைவு
பவானிசாகர் அணை
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து உபரி நீராக பவானி ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை குறைந்து வருவதால் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு உபரிநீராக 3 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த மாதம் 5-ந் தேதி காலை 9 மணியில் இருந்து அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக உள்ளது.