பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைவு
நீர்வரத்து
சத்தியமங்கலத்தில் இருந்து மேற்கே 16 கி.மீ. தூரத்திலும், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வடகிழக்கில் 36 கி.மீ தூரத்திலும் பவானி ஆறு, மோயாறு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது பவானிசாகர் அணை. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை மற்றும் தமிழ்நாட்டில் 2-வது பெரிய அணை என்ற பெருமை பவானிசாகர் அணைக்கு உண்டு. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி என கணக்கிடப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 962 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 96.25 அடியாக இருந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,150 கன அடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2 ஆயிரத்து 200 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழையின்றி வறண்ட வானிலை காணப்படுகிறது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 764 கன அடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 95.96 அடியாக சரிந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,150 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு ஆயிரத்து 2 ஆயிரத்து 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.