ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட், பழக்கடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை


ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட், பழக்கடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை
x

திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.29¼ கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட், பழக்கடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.29¼ கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட், பழக்கடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட்

திருவண்ணாமலை நகரப்பகுதியில் காய்கறி சந்தை ஏதுமில்லை. இதனால் தற்போது திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள கடலைகடை மூலை சந்திப்பு பகுதியில் நகராட்சி தெரு மற்றும் சாலை ஓரங்களில் காய்கறி கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல் தேரடி வீதியில் உள்ள ஜோதி பூ மார்க்கெட்டில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் பூக்கடைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது இடநெருக்கடிக்கு உள்ளாகி காணப்படுகிறது.

சாலையோரங்களில் உள்ள கடைகளால் விழா நாட்களில் அந்த பகுதிகளில் இடநெருக்கடியும், அதிகளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு நகரின் மையப்பகுதியில் பொதுமக்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் நகராட்சிக்கு சொந்தமான காந்திநகர் பைபாஸ் பகுதியில் உள்ள 2.67 ஏக்கர் காலியிடத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ஒருங்கிணைந்த காய்கறிச்சந்தை, பூ மார்க்கெட், பழக்கடைகள் ரூ.29¼ கோடி மதிப்பில் அமைக்க ஜி.எம்.எஸ். எலகண்ட் பில்டர்ஸ் என்ற நிறுவனத்திற்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

இதில் தரைத்தளத்தில் 128 காய்கறி மற்றும் பழக்கடைகள், முதல் தளத்தில் 128 பூக்கடைகள், கழிப்பிட வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மேலும் சாய்தள வசதி, இருசக்கர வாகனம் நிறுத்துமிட வசதி, கண்காணிப்பு கேமரா, குடிநீர், மழைநீர் வடிகால்வாய், சாலை வசதி, உயர்மின் கோபுரம் ஆகிவை அமைக்கப்பட உள்ளது.

இந்த ஒருங்கிணைந்த காய்கறி, பூ மார்க்கெட், பழக்கடைகள் அமைப்பதற்கான பூமி பூஜை செய்யும் நிகழ்ச்சி இன்று காலை திருவண்ணாமலை நகராட்சி சார்பில் காந்தி நகர் பைபாஸ் சாலை வணிக வளாகம் அமைய உள்ள இடத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் முருகேசன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்தார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்கத் துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாநில கைப்பந்து சங்க துணை தலைவர் ஸ்ரீதரன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திவேல்மாறன், தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் பிரியா விஜயரங்கன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story