ரூ.35 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம்
நாகர்கோவிலில் ரூ.35 லட்சத்தில் மறு சீரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ரூ.35 லட்சத்தில் மறு சீரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மறு சீரமைப்பு வணிக வளாகம்
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகில் மகளிர் திட்டத்தின் மூலமாக பூமாலை வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வணிக வளாகத்தை புதுப்பித்து நவீனப்படுத்தும் வகையில் ரூ.35 லட்சத்தில் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று திறப்பு விழா நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பூமாலை வணிக வளாகத்தை திறந்து வைத்தார். அதே நேரத்தில் வணிக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். பின்னர் அரங்குகளை பார்வையிட்டு வணிக வளாகத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
11 கடைகள்
மறு சீரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தில் தற்போது 11 கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சார்பில் தயாரிக்கப்படும் கைவினை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலைவாழ் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்பட்ட சுத்தமான தேன், மஞ்சள், கிராம்பு, கைவினை பொருட்களான பனை ஓலை பொருட்கள், தேங்காய் பொம்மைகள், வாழை நார் பொருட்கள், கடல் சிப்பி பொருட்கள், துணி பொருட்கள், உணவு வகைகளான சிறு தானியங்கள், பயிறு வகைகள், கிழங்கு வகைகள், உலர் மீன்கள், ஜூஸ் வகைகள், ஊறுகாய் மற்றும் துணி பைகள், சோப்பு, மண்பாண்ட பொருட்கள், சணல் பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது. மேல் தளத்தில் ஒரு கூட்டரங்கமும் செயல்பட்டு வருகிறது.
விழாவில் வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், திட்ட இயக்குனர் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அசன், காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் ஆனந்த், ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் சரவணன், ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகபாய், ராஜா, மகளிர் திட்ட உதவி அலுவலர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.