ரூ.20 கோடியில் புதிய மருத்துவ கட்டிடம் கட்ட பூமி பூஜை
சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.20 கோடியில் புதிய மருத்துவ கட்டிடம் கட்ட பூமி பூஜை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
சீர்காழி:
சீர்காழி பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடம் கட்டுவதற்கான தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிட பிரிவு) கார்த்திகேயன், உதவி பொறியாளர் ஜாண்டி ரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு தலைமை டாக்டர் அருண் ராஜ்குமார் வரவேற்று பேசினார். விழாவில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்து பேசுகையில், சீர்காழி மக்களின் வேண்டுகோளை ஏற்று ரூ.20 கோடி மதிப்பீட்டில் பழைய அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 47ஆயிரத்து 259 சதுர அடியில் 3 அடுக்கு மருத்துவ கட்டிடம் கட்டப்படவுள்ளது. இதில் 50 படுக்கை அறைகள் மற்றும் தீவிர சிகிச்சை மையம் அமைய உள்ளது. இது இந்த பகுதி மக்களுக்கு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்றார். விழாவில் டாக்டர் மருதவாணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பாஸ்கரன், ராமு, ஒன்றிய துணை செயலாளர் முருகன், தி.மு.க. நிர்வாகிகள் ராஜ்குமார், மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.