விருத்தாசலத்தில் சொந்த சைக்கிளை எடுத்து செல்வது போன்று திருடி செல்லும் வாலிபர் சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
விருத்தாசலத்தில் சொந்த சைக்கிளை எடுத்து செல்வது போன்று வாலிபர் ஒருவர் திருடி செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் அரசு மருத்துவமனை செல்லும் சாலையை சேர்ந்தவர் கீதா. இவரது வீட்டு முன்பு சைக்கிளை நிறுத்தியிருந்தார். சம்பவத்தன்று இரவில மர்ம மனிதர்கள் இதை திருடி சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அவர் விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் பார்த்தனர்.
அதில், ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வருகிறார்கள். அதில் கீதா வின் வீட்டுக்கு அருகே வந்தவுடன், பின்னால் அமர்ந்துள்ளவர் மட்டும் இறங்குகிறார்.
சுற்றும் முற்றும் பார்க்கும் அந்த நபர், தான் அணிந்து இருக்கும் கைலியை கட்டியபடி கீதாவின் வீட்டின் அருகே சென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஹாயாக சென்றுவிடும் காட்சி பதிவாகி உள்ளது.
வைரலான வீடியோ
சைக்கிளை திருடும் போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சைக்கிள்களில் மக்கள் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்த போதிலும், ஏதோ தனக்கு சொந்தமான சைக்கிளை எடுத்து செல்வது போன்று அந்த நபர் அச்சமின்றி துணிச்சலாக சைக்கிளை ஓட்டி செல்கிறார். அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபரும் பின்தொடர்ந்து செல்கிறார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.